பொதுத்தேர்வுக்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2020 20:08

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பிளஸ் டூ தேர்வில் பணியாற்றிய கல்வித்துறை ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்காததால் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

  திண்டுக்கல் மாவட்டத்தில்  கடந்த 5 மாதங்களுக்கு முன்பு11 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் நடந்து. தேர்வு முடிந்து ஐந்து மாதங்கள் ஆகியும் இதில் பணியாற்றிய ஆசிரியர்கள், பறக்கும் படையினர் உள்ளிட்ட  கல்வித்துறையை சார்ந்தவர்களுக்கு உழைப்பு ஊதியத்தை பெற்றுத் தரவில்லை.இதில் பணியாற்றி சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருந்து  நொந்து போனார்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டித்தும் அதனை உடனடியாக பெற்றுத்தர வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கூறியதாவது: ஆசிரியப்பணி அறப்பணி என்பதால் அறவழியில் போராடுகிறோம்.  கடந்த 5 மாதமாக சம்பளத்திற்கு போராடி வருகிறோம். பலதுறை ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்துவிட்டது. ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய கல்வித்துறை ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்படவில்லை. பிளஸ் ஒன் பிளஸ் டூ தேர்வு முடிந்து ஐந்து மாதமாகியும், முடிவுகள் வந்து அந்த மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து விட்டார்கள்.ஆனால் எங்களுக்கு இன்னும் சம்பளம் வரவில்லை. பலர் சாப்பாட்டுக்கு திண்டாட வேண்டிய நிலை உள்ளது. படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் கட்ட முடியவில்லை .இந்த அவலத்தை அதிகாரிகள் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் கேட்டபோது: தேர்வுத்துறையில் நடந்த விஷயம் இது. எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும்  பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு டிராப்ட் தயார் செய்யப்பட்டுள்ளது.  விரைவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் ஏற்பாடு செய்யப்படும், என்றார். இதையடுத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஊழியர்கள் கலைந்து சென்றனர்.