திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்பிரகாரத்தில் உலா

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2020 19:26

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமிகோவில் ஆவணித் திருவிழாவில் சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடந்து வருகிறது. ஆவணித் திருவிழா 8ம் திருநாள் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

வெள்ளை சாத்தி உலா :

 அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெண்பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்தார்.

பச்சை சாத்தி உலா :

  வெள்ளை சாத்தி உலாவை தொடர்ந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்த சுவாமி சண்முகருக்கும், வள்ளி-தெய்வானைக்கும் அபிஷேகம், அலங்காரமாகி பகல் 11 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதனையடுத்து நண்பகல்11.30 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை மாலை சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார்.

தேரோட்டம் ரத்து

ஆவணித் திருவிழாவின் 10ம் திருநாளான செவ்வாய்கிழமை தேரோட்டம் நடைபெறாது. பதிலாக விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளியம்மன் ஆகியோர் தனித்தனி கேடய சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழாவிற்காக நிறுத்தப்பட்ட தரிசனம், இன்று முதல் காலை 5.30 முதல் இரவு 7 மணி வரை வழக்கம் போல் நடைபெறும், தரிசனம் செய்ய www.tnhrce.gov.in என்ற இணைய தள முகவரியில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது