ஆம்புலன்ஸ் தாமதம் கரோனா தொற்றால் இறந்தவரை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம்

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 16:00

தேனி, ஆக1-

தேனி மாவட்டம் கூடலூரில் கரோனா பாதிப்பில் இறந்த மூதாட்டியை அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதம் ஆனதால், தள்ளுவண்டியில் மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்த அவலம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் கூடலூர் 14 ஆவது வார்டு அழகு பிள்ளை தெருவை சேர்ந்தவர், பொன்ராஜ் மனைவி சின்னம்மாள்(80). இவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அவரது மகன் சிவனேசன் அழைத்துச் சென்றார்.மருத்துவர் அவருக்கு வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சை அளித்து, கரோனா பரிசோதனை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் சின்னம்மாளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டில் தனிமை படுத்தி வைத்திருக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.இதற்கிடையில் ஜூலை. 31 அதிகாலை சின்னம்மாள் இறந்தார். இந்த தகவலை கூடலூர் நகராட்சி சுகாதாரப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத்துறையினர் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவிப்பாதாக சிவனேசனிடம் தெரிவித்து விட்டு சென்றனர். சுமார் 12 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த தெருவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து உடலை எடுக்குமாறு சிவனேசனை வலியுறுத்தினர். சிவனேசன் நகராட்சி சுகாதார பிரிவிற்கு தகவல் தெரிவித்தும் அவர்களிடமிருந்து பதில்  கிடைக்காதலால், விரத்தியடைந்தார்.

சிவனேசன், அவரது மகன் ராயர் ஆகியோர் வாடகைக்கு தள்ளுவண்டியை எடுத்து, கரோனா பாதிப்பால் இறந்த சின்னம்மாள் பிரேதத்தை மயானத்திற்கு எடுத்து சென்றனர்.கரோனா தொற்று பிரேதத்தை பாதுகாப்பு இல்லாமல் தள்ளு வண்டியில், முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தொற்று எளிதாக பரவும் நிலையில் அச்சமடைந்து ஓடி  ஒளிந்தனர்.


பின்னர் தகன எரிவாய மேடைக்கு கொண்டு சென்று பிரேதம் எரிக்கப்பட்டது.


கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அலட்சியமாக தீ நுண்மி பாதித்த பிரேதத்தை பாதுகாப்பு இல்லாமல் கூடலூர் தெருக்களில் கொண்டு சென்றது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக பணியாற்றிய சுகாதார துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.