நெல்லை அருகே குடிபோதையில் கணவர் தகராறு , அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மனைவி

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 15:26

பாளையங்கோட்டை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே குடிபோதையில்  தகராறு செய்த   கணவர் மீது  அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர் .

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (42) கூலித்தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள் . இவர்களுக்கு அபி, அனிதா  என்ற இரண்டு மகள்களும் அஜய் என்ற ஒரு மகனும் உள்ளார் . குடிபோதைக்கு அடிமையான குமார் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதோடு குழந்தைகளையும் அடித்து உதைப்பதாக கூறப்படுகிறது. 

வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குமார் வழக்கம் போல் மனைவியுடன் தகராறு செய்ததுடன் அடித்து தாக்கியும் உள்ளார் . இதனால் தகராறு முற்றிய நிலையில் குமார் கையில் கத்தியுடன் குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார் . 

இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கியம்மாள் அவரை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பாசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இசக்கியம்மாளை கைது செய்தனர் .

குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவியே கல்லைத்தூக்கிப் போட்டு கொன்ற சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.