சென்னை முகலிவாக்கம் கட்டட விபத்து போன்ற பேராபத்து திருச்சியிலும் காத்துக்கொண்டிருக்கின்றது; விதிமீறும் கட்டிட கட்டுமானங்களை மாநகராட்சி கண்டுகொள்வதில்லை - அல்லூர் சீனிவாசன்

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2020 20:15

திருச்சி மாநகராட்சியில், பொன்மலைக் கோட்டம், அரிமங்கலம் கோட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், கோ-அபிஷேகபுரம் கோட்டம் என 4 கோட்டங்கள், 65 வார்டுகள் இருக்கின்றன. திருச்சி மாநகராட்சி எல்லைக்குள்  மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெரிய வணிக வளாகங்கள் என நிறைந்து விரிந்துள்ளது.  

   திருச்சி மாநகராட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி உறையூரில் இயங்கி வந்த டாக்டர்ஸ் டயோக்னடிக்ஸ் செண்டர் இரத்த பரிசோதனை மையத்திற்கு விசிட் அடித்த அதிகாரிகள் அந்த நிர்வாகம் கடந்த 2011-ம் கட்டப்பட்டுள்ள அந்த கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி 4-வது தளம் அமைக்கப்பட்டு அங்கு அந்த நிறுவனம் சார்பில் பணிகள் இயங்கிக்கொண்டிருந்தன.

  முறையான அனுமதியின்றி 4-வது மாடி வரை கட்டியதால் அந்த பரிசோதனை மையத்தை மாநகராட்சி அதிகாரிகள் அண்மையில் மூடி சீல் வைத்தனர். மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஆனால், விதிமுறை மீறல் கட்டடங்கள் மீது பாரபட்சமில்லாத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் இப்போது வலுத்துள்ளன.

  இது குறித்து விதிகளை மீறிய கட்டிடங்களின் விபரங்களை பொது நல வழக்குகளை தாக்கல் செய்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்களைப் பெற்ற, சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசன் தெரிவிக்கையில், திருச்சி மாநகராட்சியில் புதிதாக கட்டப்படும் சிறுசிறு குடியிருப்புகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை விதிமுறைகளை மீறியும் அனுமதியின்றியும் கட்டடங்களை கட்டி வருகின்றனர். சில கட்டுமான நிறுவனங்கள் விதிகளை மீறியதை நீதிமன்றமே சுட்டிக்காட்டியும் விதிமீறலைத் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.

  அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டும்போதே வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றிற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் பார்த்தால், மாநகராட்சியில் உள்ள பல வணிக நிறுவனங்களுக்கு பார்க்கிங் வசதி என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கின்றன. குறுகிய சாலைகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் தொடர்கின்றது.

   வரைபடத்தில் மட்டும் வாகன நிறுத்துமிடத்தைக் காட்டிவிட்டு, அதிலும் ஒரு கடை அல்லது வீட்டைக் கட்டி விடுகிறார்கள். இப்படி  திருச்சியில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதி மீறல் கட்டடங்கள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஒருபுறமிருக்க, சென்னை முகலிவாக்கம் கட்டட விபத்து போன்ற பேராபத்தும் இருக்கிறது என்கிறார் அதிர்ச்சியோடு.