‘‘எனது தனியறையில் அத்து மீறி நுழைந்து சேதப்படுத்தி, பொருட்களை திருடி விற்று விட்டனர்’’ பிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா கமிஷனர் அலுவலகத்தில் புகார்

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2020 17:44

‘‘பிரசாத் ஸ்டூடியோவில் எனது தனியறைக்குள் புகுந்து விலைமதிப்பில்லாத முக்கியமான பொருட்களை சேதப்படுத்தி திருடி விட்டனர்’’ என்று இசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அது தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு விவரம் வருமாறு:–

‘‘நான் கடந்த 1976ம் ஆண்டு முதல் 1,300 படங்களில் 7,000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் தெருவில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவை என் மீது உள்ள மதிப்பு மற்றும் நட்பு காரணமாக கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளரான எல்.வி. பிரசாத் எனக்கு தந்தார். அந்த ஸ்டூடியோவில் தொடர்ந்து தங்கி இசை அமைத்துக் கொள்ளுமாறு வேண்டினார். அதன் பேரில் நான் அந்த ஸ்டூடியோவை பயன்படுத்தி வருகிறேன். ஸ்டூடியோவில் எனக்கென ரெக்கார்டிங் 1 என்ற பெயரில் தியேட்டர் ஒன்றையும் எல்வி பிரசாத் அமைத்துக் கொடுத்திருந்தார்.


தற்போது வரை அதனைத்தான் நான் பயன்படுத்தி வருகிறேன். அதில் பல லட்சம் அதிக பணம் செலவில் மியூசிக் நோட்ஸ், கருவிகள் அங்கு உள்ளன. இதற்கிடையில் எல்வி பிரசாத் இறந்த பிறகும் அதனை அனுபவித்துக் கொண்டு இருந்தேன், அவரது மகன் ரமேஷ் பிரசாத்தும் என்னை அதே ஸ்டூடியோவில் தொடர்ந்து பணியாற்ற வைத்து ஆதரவு அளித்தார். தற்போது ரமேஷ் பிரசாத் காலமான பிறகு அவரது மகன் சாய் பிரசாத் என்னை அங்கிருந்து காலி செய்யச்சொல்லி அடிக்கடி வற்புறுத்தினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாய்பிரசாத் அடியாட்களுடன் உள்ளே நுழைந்து மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய இணைப்புக்களை துண்டித்து எனக்கு நெருக்கடி கொடுத்தார். சாய்பிரசாத் மற்றும் அவரது அடியாட்கள் அடிக்கடி இது போல அடியாட்களை வைத்து எனது அமைதியான சூழ்நிலையை கெடுத்தனர். இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் சிவில் வழக்கு தொடர்ந்தேன் அணுகினேன். அது நிலுவையில் உள்ளது.


தற்போது கொரோனா லாக்டவுன் சமயத்தை பயன்படுத்தி சாய் பிரசாத் கும்பல் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள எனது தனிப்பட்ட அறையை உடைத்து அதில் இருந்த விலைமதிப்பற்ற இசைக்கருவிகள் மற்றும் பொருட்களை திருடியும், அவற்றை அப்புறப்படுத்தியும், சேதப்படுத்தியும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நான் பலகோடி நஷ்மடைந்துள்ளேன். அங்கு நிறைய விலைமதிப்பற்ற பொருட்கள் உள்ளன. அவற்றை அவர்கள் அதனை கள்ளச்சந்தையில் விற்றுவருகின்றனர். பட்டப்பகலில் இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சாய்பிரசாத் மற்றும் அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.