வீட்டுக்கு வேலையாட்கள் அனுப்புவதாக நுாதன முறையில் பண மோசடி செய்த பலே பெண் சென்னை அடையாறு துணைக்கமிஷனரிடம் நுாதன புகார்

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2020 17:33

வீட்டுக்கு வேலையாட்களை  ஆன்லைனில் தேடும் நபர்களை குறிவைத்து பெண் ஒருவர் நுாதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனிடம் சென்னை ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேனியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ் நேற்று முன்தினம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘கடந்த 24ம் தேதியன்று ஜஸ்ட் டயல் இணையதளம் மூலம் வீட்டிற்கு வேலை ஆட்கள் தேவை என கேட்டேன். அப்போது ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனம் எனக்கு வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் மேன்பவர் நிறுவனங்களின் தொடர்பு எண்களை அனுப்பினர். அவர்கள் அனுப்பிய பட்டியலில் அமுல் மேன்பவர் ஏஜென்சியில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி அமுல் என்ற பெண் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். சைதாப்பேட்டையில் நிறுவனம் வைத்திருப்பதாக கூறிய அவர் தன்னிடம் நிறைய பணியாட்கள் இருப்பதாக தெரிவித்தார். அடுத்த நாள் பணியாள் ஒருவருடன் எனது வீட்டுக்கு அமுல் வந்தார். மேலும் பணியாள் சேர்ப்பதற்கு டெபாசிட் தொகையாக தங்களது மேன்பவர் நிறுவனத்துக்கு ரூ. 4,500 முன்பணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்தார். அந்த பணத்தை அவர் தந்த அக்கவுண்டில் ஆன்லைனில் செலுத்தினேன்.


பணம் பெற்றதற்காக ரசீதும் கொடுத்தார். ஆனால் அவர் சொன்னபடி வேலையாட்கள் யாரையும் அனுப்பாததால் அவருக்கு போன் செய்து கேட்டேன். அப்போது வேலையாளின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். இன்னும் 1 மணி நேரத்தில் உங்கள் வீட்டுக்கு வந்து விடுவார் என தெரிவித்தார். ஆனால் வேலையாள் வரவில்லை. இதனால் மீண்டும் அமுலுக்கு போன் செய்து கேட்டேன். அதற்கு அவர் வேலையாள் கொரோனா பரிசோதனை எடுக்க சென்று விட்டார். திங்கள்கிழமை உங்கள் வீட்டுக்கு வந்து விடுவார் என தெரிவித்தார். இதனால் எனக்கு அமுல் மீது சந்தேகம் ஏற்பட்டது. வேலையாள்  யாரும் வேண்டாம்.  நான் கொடுத்த பணத்தை திரும்ப தந்து விடுங்கள் என தெரிவித்தேன். அதற்கு அவர் தனது மகள் பிரசவ வலியால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு இருப்பதாகவும் சொல்லி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதன் பிறகு அவர் எனது செல்போனை எடுக்க வில்லை. இதனால் நான் அந்த பெண்ணின் நிறுவனம் குறித்து இணையதளத்தில் ஆய்வு செய்த போது அவர் ஒரு மோசடி பேர்வழி என தெரியவந்தது. கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் இது போன்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவந்தது. இது குறித்து ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் நான் புகார் அளித்த போது அவர்களும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஜஸ்ட் டயல் நிறுவனம் மற்றும் மோசடிப் பெண் அமுல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


நுாதன முறையில் நடந்த இந்த பணமோசடி குறித்து அசோக்ராஜ் அளித்த புகாரின் பேரில் துணைக்கமிஷனர் விக்ரமன் உத்தரவின் பேரில் நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.