அனைத்து தனியார் நிறுவனங்களின் வாகனங்களுக்கும் அனுமதி * கால்டாக்சி, ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே செல்லலாம் – சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 23:31

சென்னை நகரில் ஜுலை 6ம் தேதி முதல் தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதையடுத்து அனைத்து தனியார் நிறுவனங்களின் வாகனங்களும் இ பாஸ் இன்றி செல்லாம் என்றும் கால்டாக்சி, ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே செல்லலாம் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.


சென்னை நகர போக்குவரத்து காவல் துறை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வணிகர்கள் கூட்டமைப்பு, தனியார் போக்குவரத்து, ஆட்டோ ஓட்டுநர் சங்கம், கோயம்பேடு காய்கறி, மலர் மற்றும் பழ வியாபாரிகள் சங்கம், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம், பள்ளி மற்றும் வாடகை கார் உரிமையாளர்கள் தேசிய மற்றும் சென்னை கன்டெயினர் பிரைட் சர்வீஸ் அமைப்புகளின் தலைவர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடந்தது.

சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கண்ணன் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் இணைக் கமிஷனர்கள் லட்சுமி (தெற்கு), ஜெயகவுரி (வடக்கு) மற்றும் துணைக்கமிஷனர்கள் கலந்து கொண்டார்கள். போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அது குறித்து அவர் கூட்டத்தில் பேசியதாவது:–

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு 05.07.2020 நள்ளிரவு முதல் சென்னை நகரில் தளர்த்தப்படுவதால் அதன் பிறகு 19.06.2020 ம் தேதிக்கு முன்னர் இருந்த ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட வேண்டும். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்சா அனுமதிக்கப்படுகிறது. வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளை மட்டுமே ஏற்றிக்கொண்டு சென்னை மண்டலத்திற்குள் tn-e-pass இன்றி பயன்படுத்தலாம் (பாஸ் தேவையில்லை). தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில் அந்த நிர்வாகம் ஏற்பாடு செய்யும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். (பாஸ் தேவையில்லை). அனைத்து தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.  

(பாஸ் தேவையில்லை) கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. தேவையின்றி வெளியில் வரும் பொதுமக்களின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. சரக்கு வாகனங்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது. விமானம் மற்றும் இரயில் பயணிகள் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு. ஆட்டோக்கள் மற்றும் கால்டாக்சிகள் மற்றும் இதர பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மற்றும் சேனிடைசர் கண்டிப்பாக அடித்திருக்க வேண்டும். ஆட்டோ மற்றும் கால்டாக்சியின் ஓட்டுநர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், வாகனத்தில் சேனிடைசர் வைத்திருக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாத பயணிகளை வாகனத்தில் ஏற்றக்கூடாது. கூட்டமாக வாகனத்தில் பயணிக்க வருபவர்களை அனுமதிக்கக் கூடாது, போதிய சமூக இடைவெளியினை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வாகனங்களில் முகக்கவசமின்றி பயணிப்பவர்கள் மீது அமலில் உள்ள 144 சட்டத்ததை மீறியதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இந்த தளர்வுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் போது மிகவும் அத்தியாவசியமான மருத்துவ தேவைகளுக்காக மட்டும் தங்கள் வாகனங்களை பயன்படுத்த வேண்டும்’’ உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் லாக்டவுனின் போது பறிமுதல் செய்த வாகனங்களை விடுவிக்க வேண்டும் என்றும், வாகனத்தின் ஆவணங்களை புதுப்பிக்க காலஅவகாசம் வேண்டுமென்றும் தெரிவித்தனர். மேலும் தனியார் நிறுவன வாகனங்கள் ஏற்கெனவே பெற்ற இ - பாஸ் வைத்து மற்ற மாவட்டத்திற்கு செல்லவேண்டும் என்றும் தெரிவித்தனர். அதற்கு கூடுதல் கமிஷனர் கண்ணன் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும்,  

அரசின் உத்தரவுகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் மதித்து முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டார்.