6ம் தேதி முதல் சென்னையில் ஊரடங்கு தளர்வு: வியாபாரிகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் காவல்துறை வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 23:29

நாளை முதல் சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செயல்படுத்தப்படவுள்ளதால் அது தொடர்பாக சென்னை நகரம் முழுவதும் காவல்துறையினர், வியாபாரிகளுடன் இன்று விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் ஊரடங்கு தளர்வின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில், தங்களது காவல் நிலைய எல்லையில் உள்ள வணிகர்கள், வியாபாரிகள், சிறிய கடை உரிமையாளர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் கீழ்க்கண்ட விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

* கடைக்கு வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* கடைக்குள் நுழையும் முன்பு வெப்பமாணி கொண்டு உடல் வெப்ப நிலையை பரிசோதித்து சராசரி வெப்பநிலை உள்ள நபர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

* அனைவரும் கடையில் திரவ சுத்திகரிப்பான் வைத்துக கொண்டு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் கைகளை கழுவி சுத்தம் செய்யச் சொல்லி அதன் பின்னரே கடைக்குள் அனுமதிக்க வேண்டும்,

* சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்க அறிவுறுத்த வேண்டும் .

* ஒவ்வொரு கடையின் நுழைவாயிலிலும் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 3 அடி தூரத்தைக் கொண்ட வட்டங்களை வரையவும். வாடிக்கையாளரை வட்டத்தில் நிற்கும்படி வற்புறுத்தவும்.

* கடைக்குள் உள்ள இடத்தைப் பொறுத்து குறைந்தபட்ச வாடிக்கையாளர்களை மட்டும் கடைக்குள் அனுமதிக்க வேண்டும், மீதமுள்ள நபர் வெளியே செல்லும் வரை வெளியே காத்திருக்க வேண்டும்.

* ஒவ்வொரு கடையும் போதுமான அளவு முகக்கவசங்களை வைத்திருக்க வேண்டும்.


பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஊரடங்கு தளர்வு காலங்களில் மேற்படி அறிவுரைகளை கடைபிடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.