ராஜபாளையத்தில் 45 வயது பெண் இறந்தபின், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கள் அச்சம்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 19:15

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (45). இவர் உடல் நிலை சரியில்லாத நிலையில்  கடந்த 26ம் தேதி, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். 

அங்கு மருத்துவர்கள் சாதாரண காய்ச்சல் எனக் கூறி, அவரை வீட்டுக்கு  அனுப்பி விட்டனர். வீட்டுக்கு சென்ற பார்வதிக்கு மூச்சு திணறல்  அதிகமாக ஏற்பட்டதை அடுத்து மீண்டும் மருத்துவமணைக்கு சென்றுள்ளார். 

அவருக்கு வைரஸ் தொற்று பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவருக்கு அவரின் உறவினர்கள், இறுதிச்சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர். இந்நிலையில் இறந்த போன பார்வதிக்கு, நேற்று (03'ம் தேதி) தொற்று உறுதி என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதனால் அவரின் இறுதிசடங்கில் பங்கேற்றவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இது வைத்தியநாதபுரத்தில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.