கடைகளில் திருட்டு.. போலீசார் தீவிர விசாரணை

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 18:38

மார்த்தாண்டத்தில் ஒரே நாளில் மூன்று கடைகள் உட்பட நான்கு இடங்களில் திருட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் பம்மம் பகுதியில் வாகன ஸ்பெயர்பார்ட்ஸ் விற்கும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியில் ஜாபர் என்பவர் ஜூவல்லரி கடையும், சுரேஷ் என்பவர் பிளக்ஸ்போர்ட் பிரின்ட் செய்யும் கடையும் வைத்துள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல நேற்று முன்தினம் மாலையில் கடைகளை அடைத்து கொண்டு வீடுகளுக்கு சென்றனர். நேற்று காலையில் பார்த்த போது இந்த மூன்று கடைகளின் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.


இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்  பேரில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். தக்கலை போலீஸ் டிஎஸ்பி ராமசந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு நடந்த கடைகளை ஆய்வு செய்தார். கடைகளில் சொற்ப அளவில் மட்டுமே பணம் இருந்துள்ளது. இதைதொடர்ந்து பணத்தையும், சில பொருட்களையும் எடுத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.


இதே போன்று அதே பகுதியில் ஒரு போதகரின் வீடு உள்ளது. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் பூட்டி கிடந்தது. அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பணம் மற்றும் நகைகளை தேடி உள்ளனர். ஆனால், எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. சம்பவம் குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். ஒரே நாளில் நான்கு இடங்களில் திருட்டு நடந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.