தென்காசி மாவட்டம்: விவசாய பணிகள் மும்முரம்!

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 18:33

பாளையங்கோட்டை , ஜூலை    04          

தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிரொலியாக விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. நெல் நாற்றும் நடும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.

தென்காசி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டமாகும்  . இங்கு அதிக அளவில் நெல், வாழை , காய்கறிப்பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள தென்காசி , குற்றாலம் , செங்கோட்டை, புளியரை  உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்வது வழக்கம் . 

இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தென்காசி , செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழையை நம்பி அந்த பகுதி முழுவதும் விவசாயப் பணிகள்  தீவிரமடைந்துள்ளது.  நாற்று நடும் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.. தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல்லை நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.