சென்னை ஐஐடி விடுதியில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு கொரோனாவால் பாதிப்படைந்த காவல் ஆளினர்களிடம் வீடியோ காலில் பேசினார்

பதிவு செய்த நாள் : 03 ஜூலை 2020 22:13

சென்னை, ஜுலை. 3

சென்னை ஐஐடி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்த கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அங்கு சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளினர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி நலம் விசாரித்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி தங்கும் விடுதிக்கு இன்று  மாலை சென்றார். அங்கு கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள், மற்றும் காவலர்களை வீடிகோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் சமூக இடைவெளியுடன் அவர்களை நேரில் சந்தித்தும் நலம் விசாரித்தார். ‘காய்ச்சல் வருவது சகஜமே. கொரோனாவை நினைத்து கவலைப்படுவது கூடாது. தைரியமே நோயை விரட்டி விடும். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நீங்கள் கேளுங்கள். உடனே அது செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என கமிஷனர் அவர்களுக்கு தைரியமூட்டும் வகையில் பேசினார்.

மேலும் அங்கு காவலர்களை தனிமைப்படுத்துவதற்கு தயார் செய்யப்பட்டுள்ள தாமிரபரணி விடுதியையும் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சென்னை நகர கூடுதல் கமிஷனர்  தினகரன், கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் சுதாகர், மயிலாப்பூர் (பொறுப்பு) துணை ஆணையாளர் (சென்னை மத்தியகுற்றப்பிரிவு) ராஜேந்திரன் மற்றும் கோட்டூர்புரம் உதவிக்கமிஷனர் சுதர்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுவரை 1,250 போலீசாருக்கு பாதிப்பு – கமிஷனர் பேட்டி:

அதனைத் தொடர்ந்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சென்னையில் கோவிட் தடுப்புப்பணியில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சென்னை நகர காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு அவ்வப்போது போலீஸ் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுவரை சென்னை நகர காவல்துறையில் மொத்தம் 1,250 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். 250 பேர் கோவிட் தடுப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு தொடர்பாக தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை மக்கள் சரியான முறையில் பின்பற்றினால் நிச்சயம் அந்த நோயை நாம் வெல்லலாம். பொதுமக்கள் தொடர்ந்து அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.