சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 19 பேருக்கு கொரோனா விசாரணைக்கு ஆஜரான திமுக எம்பி தனிமைப்படுத்தப்பட்டார்

பதிவு செய்த நாள் : 03 ஜூலை 2020 20:52

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் உள்பட 19 பேருக்கு கொரோானா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அங்கு விசாரணைக்கு ஆஜரான திமுக எம்பி ஜெகத்ரட்சகனும் தனிமைப்படுத்தப்பட்டார்.


சென்னையில் கொரோனா வைரஸால் பாதிப்படைவோரின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக டிஜிபி அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந் நிலையில் தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்தையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அமலாக்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் அதிகாரிகள் உள்பட 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியாகி உள்ளது.


கொரோனா தொற்று ஏற்பட்ட 6 அமலாக்கத்துறை அதிகாரிகள், அலுவலக ஓட்டுனர்கள் உட்பட 19 நபர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பான புகாரில் அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஜரானார். 6 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்தில் கொரோனா பரவியுள்ளதையடுத்து அங்கு விசாரணைக்கு சென்ற ஜெகத்ரட்சகன் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.