சாத்தான் குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 23:06

சென்னை, 

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறியதாக போலீசார் கைது செய்து தாக்கியதுடன், கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து  இறந்தனர். எனவே, போலீசாரை கண்டித்து சாத்தான்குளத்தில் பொதுமக்கள் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன்,  காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். 

அதனையடுத்து மதுரை ஐகோர்ட் கிளை தாமாகவே முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது. ஐகோர்ட் உத்தரவின்பேரில் தற்போது மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து வணிகர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வலியுறுத்தினர். இதற்கிடையே சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான  வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாவும், ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணைக்கு வரும்போது இதனை தெரிவித்து அனுமதி பெற்று சிபிஐயிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதில் நீதிமன்றம் தலையிடாது, அது அரசின் கொள்கை முடிவு என்றும் மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் பென்னிக்ஸ், அவரது தந்தை இறப்பு தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.

அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் ஊரடங்கை மீறியதாக கடந்த 19ம் தேதி சாத்தான்குளம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். 22ம் தேதி சிறையில் இருந்த அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பென்னிக்ஸ், ஜெயராஜ் இறந்தது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 176 (1–A) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.