காரைக்குடியில் சோகம் மண்சரிவில் சிக்கி தொழிலாளி பலி

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 22:20

காரைக்குடி :

காரைக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண்சரிவில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக 120 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மந்தமாக நடைபெற்று வரும் பணியால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில்  கீழ ஊரணி மேற்கு பகுதியில் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கோவை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற சின்னராஜ் 21 அடி ஆழத்தில் இறங்கி குழாய் இணைக்கும் போது பக்கவாட்டில் மண் சரிந்து  உயிருக்கு போராடினார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு மீட்பு பணி குழுவினர், காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி சின்னராசுவை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து காரைக்குடி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.