இரும்பு பெயிண்ட் சிமெண்ட் வியாபாரம்.. ஒரு நாள் விடுமுறை!

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 18:54

 நெல்லை மாவட்டத்தில் கொரனா பரவலை தடுக்க மாவட்டம் முழுதும் வியாபார நிறுவனங்கள் ஒருநாள் விடுமுறை அளிக்க  வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நெல்லையில் இன்று இரும்பு சிமெண்ட் விற்பனையகம்,ஹார்டுவேர், உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் அதிகம் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 நாட்கள் 7 பிரிவுகளாக வியாபார நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு வாரம் ஒருமுறை வியாபர நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் , அன்றையதினம் விடுமுறை விடப்பட்ட நிறுவனங்களில் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமை இரும்பு சிமெண்ட் விற்பனையகம் , ஹார்டுவேர் , பர்னிச்சர் கடைகள் , எலக்ட்ரிக்கல் கடைகள் விடுமுறை விடவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் இரும்பு , சிமெண்ட் , பெயின்ட் கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டு இருந்தது. நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இருபுறங்களிலும் உள்ள இருப்பு பொருட்கள் விற்பனையகம் முழுமையாக மூடப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அடைக்கப்பட்ட கடைகளில் கிருமிநாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.