உலகமே தனித்திரு என்று கூறுகிறது ஒன்றிணைவோம் வா என்கிறார் ஸ்டாலின்! --அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு!

பதிவு செய்த நாள் : 26 ஜூன் 2020 16:58

உலக நாடுகளே அனைவரும் தனித்து இருக்க வேண்டும் என்று சொல்லும் போது, மக்கள் மற்றும் கொரோனா பற்றி கவலைப்படமால் ஒன்றிணைவோம் வா என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் தாலூகா அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக ரூ1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி  தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கினார். மாவட்டத்தில் 36,267 மாற்றுத்திறனாளிகளுக்கு 3கோடியே 62லட்சத்து, 67 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையெடுத்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் ஈரானில் இருக்கும் தமிழக மீனவர்கள் 700 பேர் வரும் 28ந்தேதி இந்திய கப்பல் படை கப்பல் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகின்றனர். இதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் மத்தியஅரசிடம் வலியுறுத்தி எடுத்துள்ளார். துறைமுகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது என்றும், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணி குறிந்து உருப்படியான ஒரு ஆலோசனையும் கூறவில்லை,விலகி இருக்க வேண்டும், விழித்து இருக்க வேண்டும், தனித்து இருக்க வேண்டும் என்பது அரசின் கோஷம்,ஆனால் ஒன்றிணைவோம் வா என்பது திமுகவின் கோஷம் என்றும், தனித்து இருக்க வேண்டும் என்று உலக நாடுகளே சொல்லும் போது, ஒன்றினைவோம் வா என்று கூறும் ஒரே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தான். மக்களை பற்றி கவலைப்படமால், கொரோனா தொற்றை பற்றி கவலைப்படமால் ஒன்றிணைவோம் என்று கூறுகிறார் மு.க.ஸ்டாலின். இது ஒன்று கூடும் நேரமா இது ? இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது,24மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவின்படி உடற்கூறய்வு செய்யப்பட்டு உரியவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது துயரமான சம்பவம் இது போன்று நடக்க கூடாது என்று முதல்வர் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 10 லட்சம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை என்பதனை அறிவித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து வழக்கினை பதிவு செய்து விசாரித்து வருகிறது. நீதி மன்றம் என்ன தீர்ப்பு கூறுகிறதோ அதன் அடிப்படையில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அது தான் உண்மையான நிலை என்றும், கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ்  வங்கி கண்காணிப்பு என்பது ஏற்புடையது இல்லை என்பது முதல்வர் கருத்து, அது தான் அரசின் கருத்தும், தமிழகம் கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்பட்டு 7 ஆண்டுகளாக மத்தியஅரசின் விருதினை பெற்று வருகிறது. எனவே தமிழகத்திற்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் தேவையில்லை என்பதனை முதல்வர் உரிய நேரத்தில் தெரிவிப்பார் என்றார்.