வாகன விபத்து உயிரிழந்த மாணவியின் தம்பிக்கு வேலை!

பதிவு செய்த நாள் : 23 மே 2020 21:02

இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் தம்பிக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது.

பணி முடித்து திரும்பிய மருத்துவ மாணவி இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவத்தையடுத்து,  மாணவியின் சகோதரருக்கு அரசு பணி ஆணை.அமைச்சர், மாவட்ட ஆட்சியர் வழங்கினர்.

பெரம்பலூரை சேர்ந்தவர் அகிலா. இவர் சிவகங்கை மருத்துவ கல்லூரியில்  இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த மே 1ம் தேதி பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சோதனை பணியை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில், சிவகங்கை மருத்துவக் கல்லுரி விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் எதிர்பாராமல் மோதி  விபத்தில் சிக்கினார். 

இதில் பலத்த காயமடைந்த மருத்துவ மாணவி அகிலா பலத்த காயங்களுடன் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, நான்கு நாள்களுக்கு பிறகு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சாதாரண டெய்லர் குடும்பத்தை சேர்ந்த வறுமை நிலையில் இருக்கும் மாணவியின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என அவருடன் பயின்ற சக மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். 

கோரிக்கையை பரீசீலனை செய்த  ஆட்சியர், மாணவியின் தம்பி விஜய்க்கு, சிவங்கங்கை மாவட்டம் தென் சிங்கம்புணரியில் கூடுதல் கிராம நிர்வாக அலுவலராக பணி நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார். அதற்கான ஆணையினை கதர் மற்றும் தொழிற் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர், இறந்த  மாணவி அகிலாவின் பெற்றோர்களிடம் வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அகிலாவினுடன் பயின்ற சக மருத்துவ மாணவ, மாணவிகள், தங்களின் கோரிக்கையை ஏற்று 20 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்த  மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் பாஸ்கரன் ஆகியோருக்கு கண்ணீர் மல்க தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.