ஏல தோட்ட தொழிலாளர்கள் கேரளாவுக்கு செல்ல அனுமதி திமுக கோரிக்கை

பதிவு செய்த நாள் : 23 மே 2020 20:57

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கேரளாவுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் மற்றும் திமுகவினர் நேரில் சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தோட்டங்கள் உள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் 10,000 ஆண் பெண் தொழிலாளர்கள் அருகில் உள்ள இடுக்கி மாவட்ட ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்று இருப்பதால், கேரளாவுக்குள் செல்லமுடியாமல் வாழ்வாதாரம் பாதித்து முடங்கி கிடக்கின்றனர். மே ஜூன் மாதங்களில் ஏலக்காய் தோட்டங்களில் பராமரிப்பு வேலைகள் நடைபெறும். ஆனால் தற்போது கரோனா தொற்று  இருப்பதால் தோட்டங்களில் வேலைகள் நடை பெறவில்லை. இதனால் வருமானம் இன்றி கூலித்தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.

தற்போது சீசன்தொடங்குவதால் தேனி மாவட்ட ஆட்சியர் இடுக்கி மாவட்ட ஆட்சியர் உடன் கலந்து பேசி தேனி மாவட்ட தொழிலாளர்கள் ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். மேலும் மனுவில், அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா தொற்றுநோய் குழந்தைகளை மாவட்ட மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.