மீன் வாங்க கூட்டம் மாஸ்க் அணிந்து வந்த பொதுமக்கள்.. அதிகாரிகள் பாராட்டு

பதிவு செய்த நாள் : 23 மே 2020 19:43

மதுரையில் வண்டியூர் கண்மாயில் சனிக்கிழமை காலை மீன்களை வாங்க கூட்டம் மிகுந்து காணப்பட்டது. ஆனாலும், மீன்கள் வாங்க வந்த பொதுமக்கள் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியுடன் பொறுப்புடன் நடந்து கொண்டது எல்லோரையும் ஆச்சிரியப்பட வைத்தது.

மதுரையில் நகரில் பல இடங்களில் மீன் அங்காடிகளும், புது ஜெயில் ரோட்டில் மீன் மார்க்கெட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தினசரி காலை நேரங்களில் அப் பகுதியில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். இதனால் அப் பகுதியில் இருசக்கர வாகணத்தில் பயணிப்போர் அப் பகுதியை கடக்க சிரமப்படவேண்டியிருக்கும்.

மதுரை புதுஜெயில் ரோட்டில் உள்ள மீன்மார்க்கெட்டுக்கு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பாம்பன், தங்கச்சி மடம் பகுதிகளிலிருந்து வாகனங்கள், வேன் மூலமாக கொண்டு வரப்பட்டு விற்பணை செய்யப்படுமாம்.

கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் பொதுவாக கரைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வருவதற்கு சில நாட்கள் பிடிக்கும். இதனால் மீன்கள் வைக்கப்படும் பெட்டிகள் ஐஸ் அதிகளவில் வைக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை வண்டியூர் கண்மாயில் தினசரி மீன்கள் பிடிக்கப்பட்டு, அந்த மீன்களை கண்மாய் கரையில் கிலோ ஓன்றுக்கு ரூ. 100-க்கு விற்கப்பட்டு வருவதால், மதுரை நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்து தினசரி காலை வாகனங்களில் வந்து மீன்களை பயன்பாட்டுக்கு வாங்கிச் செல்வதை காணமுடிகிறது.

பதப்படுத்தபடாத மீன் என்பதாலும், தினசரி காலையில் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பணை செய்யப்படுவதாலும், மீனை அதிகம் பேர் வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து சுப்ரமணி என்பவர் கூறியது.. கடல்  மீனைப் போல கண்மாய் மீன் சைஸில் சிறியதாக இருந்தாலும், நல்ல ருசி காணப்படுவதுடன், மேலும் அனைத்து தரப்பு மககளும் வாங்கக் கூடிய விலையும் உள்ளதாக  அவர் தெரிவித்தார்.