திருச்சுழி காவல் நிலைய சுற்றுச் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள், பொதுமக்கள் பாராட்டு

பதிவு செய்த நாள் : 23 மே 2020 19:41

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காவல் நிலையத்தில் உள்ள சுற்றுச் சுவர்களில்  ஓவியங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் திருச்சுழி காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள், மரங்கள் வளர்ப்பதன் அவசியம், சாலைப் பாதுகாப்பு விதிகள் மற்றும் விவசாயம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் திருச்சுழி காவல் நிலைய காவலர்கள் இறங்கி உள்ளனர். திருச்சுழி இன்ஸ்பெக்டர் மூக்கன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோரது முயற்சியால் காவல் நிலையத்தில் உள்ள சுற்றுச் சுவர்கள் முழுவதிலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் நிலையில் ஓவியங்கள் மட்டுமல்லாது விழிப்புணர்வு வாசகங்களும் சுற்றுச் சுவர்களில் இடம் பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினரின் இந்த ஓவிய விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. இதேபோன்று, அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமும் சீர்மி கு காவல் நிலையமே... என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.