திருநெல்வேலி மாவட்டம். தூய்மை பணியாளர்களுக்கு காவலரின் குழந்தைகள் நிவாரண உதவி!

பதிவு செய்த நாள் : 23 மே 2020 17:49

கொரோனா தடுப்பு பணியில் காவலர்களின் பணி தன்னலமற்றது என பாராட்டப்பட்டு வரும் நிலையில் நெல்லை மாநகரில் பணியாற்றும்  காவலர்களின் குழுந்தைகள் பணம் வசூல் செய்து ஏழை எளியவர்களுக்கு , தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி-, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கினர்.

கொரோனா தடுப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து காவலர்கள் ஒய்வின்றி பணி செய்து வருகின்றனர் . தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் , சோதனைச் சாவடிகள் என அனைத்து இடங்களிலும் தன்னலம் கருதாது பொதுநல நோக்கோடு அவர்கள் செய்யும் பணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் , நெல்லை மாநகர ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள காவலர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளின் குழந்தைகள் ஒன்று சேர்ந்து காவலர்களிடம் பணம் வசூல் செய்து  தினமும் 500 பேருக்கு உணவு சமைத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா அல்லாத மற்ற நோய்யாளிகள், மற்றும் அவரது உறவினர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வந்தனர் . தொடர்ந்து 35 நாட்களுக்கு வழங்கி நிலையில், இதில்  சில காவல் உயர் அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேலாக நிவாரண உதவிக்கு அளித்துள்ளதால் அடுத்த கட்டமாக அந்த பணத்தில் அரிசி , மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் வாங்கப்பட்டு ஆயுதப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ,மற்றும் கோவில் அர்சகர்கள் , முடிதிருத்தும் தொழிலாளர்கள் , என ஏராளமானவர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் முத்தரசு ,மாவட்ட ஆயுதப்படை உதவி கண்காணிப்பாளர் சிசில் ஆகியோர் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து வழங்கினர் . பல்வேறு அமைப்புகள் , தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் அளித்து வரும் நிலையில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகள் நிதி வசூல் செய்து நிவாரணம் வழங்கியது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.