பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் துாக்குப்போட்டு தற்கொலை

பதிவு செய்த நாள் : 23 மே 2020 14:14

சென்னை செங்கல்பட்டில் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் வசந்தமாளிகை படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை வாணிஸ்ரீ. பழம்பெரும் நடிகையான இவரது மகன் அபினவ் வெங்கடேஷ் கார்த்திக் (வயது 36). இவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரியில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் டாக்டர். இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லுாரியில் பணிபுரிகிறார். டாக்டர் அபினவ் கடந்த 2 மாதங்களாக கொரோனா லாக்டவுனால் சென்னைக்கு வரமுடியாமல் பெங்களூருவில் தனது தந்தையுடன் வசித்து வந்தார். தற்போது லாக்டவுன் தளர்த்தப்பட்டதையடுத்து நேற்று காலையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தார். வீட்டில் மனைவி, குழந்தைகளை பார்க்க ஆவலாக இருந்த அவர் கொரோனாவால் நேராக வீட்டுக்கு செல்லாமல் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வீட்டில் தங்கி தனிமைப்படுத்தலில் இருந்தார். இந்நிலையில் இன்று காலையில் அவர் திடீரென தனது வேட்டியால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடும்பப்பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.