பட்டியலினத்தவரை தரக்குறைவாக பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார்

பதிவு செய்த நாள் : 23 மே 2020 12:43

சென்னை, பட்டியலினத்தவரை தரக்குறைவாக பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியை சென்னை தேனாம்பேட்டை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் 14ம்  தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடந்த வாசகர் வட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. 

அது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஆதி தமிழர் கட்சியின் நிறுவனர் கல்யாணசுந்தரம் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆர்எஸ் பாரதி மீது மார்ச் 13ம் தேதியன்று புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘கலைஞர் வாசகர் வட்டத்தில் திமுகவின் மூத்த எம்பியும் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ் பாரதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் திமுக காலத்தில் ஹரிஜன நீதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள், ஹரிஜன நீதிபதிகளை நியமனம் செய்தது திமுக தான். நீதிபதி பதவி திமுக போட்ட பிச்சை, திமுகதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். 

சட்டப்படி தடை செய்யப்பட்ட ஹரிஜன் என்ற வார்த்தையை ஆர் எஸ் பாரதி திரும்ப திரும்ப தாழ்த்தப்பட்ட  தலித் மக்களை அவமதிக்கும் வகையில் பேசியிருக்கிறார். திமுகவின் மூத்த நிர்வாகி பேசியிருப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் இந்த நிகழ்வை கண்டித்து இருப்பார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் எதுவும் நடக்காததுபோல் காட்டிக் கொண்டிருக்கிறார். அவரின் இத்தகைய செயல்பாடு தலித், தாழ்த்தப்பட்ட மக்களிடையே மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை திமுக காப்பாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுவதும் போய்விட்டது. தாழ்த்தப்பட்ட ஏழைகள் என்றால் எளக்காரமாக பார்க்கும் நிலையை திமுகவினர் ஏற்படுத்தி விட்டனர்.  ஆகவே எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். ஆர்எஸ் பாரதி பேசிய வீடியோ ஆதாரங்களும் போலீசில் சமர்ப்பித்திருந்தனர்.

அந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அதனையடுத்து அவர் மீது (1)(u), 3 (1) (5) (தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக பேசுதல்) மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மத்தியக்குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று அதிகாலையில் நங்கநல்லுாரில் உள்ள ஆர்எஸ் பாரதியின் வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர். 

சென்னை எழும்பூர் கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி செல்வகுமார் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்எஸ் பாரதியின் மகன் கொரோனா வார்டில் டாக்டராக இருப்பதாகவும் அதனால் அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஆர்எஸ் பாரதியின் வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், வில்சன் ஆகியோர் கோர்ட்டில் தெரிவித்தனர். இதனையடுத்து அவருக்கு இம்மாதம் 31ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. ஜுன் 1ம் தேதியன்று மீண்டும் ஆர்எஸ் பாரதி கோர்ட்டில் ஆஜராகி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.