உயிருக்கு ஆபத்தான நிலையில் துபாயில் சிக்கி தவித்த போடி வாலிபர் ரவீந்திரநாத் குமார் எம்பி உதவி

பதிவு செய்த நாள் : 22 மே 2020 22:56

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த வாலிபர் கணேஷ்குமார் துபாயில் வேலைக்கு சென்று அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.ப. ரவீந்திரநாத் குமார்,  தூதரகம் மூலம் பேசி மருத்துவ உதவிகள் செய்துள்ளார்.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் செல்வம், கலா தம்பதியினர்.  இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் மகன் கணேஷ் குமார் (வயது 27).

குடும்ப வறுமையின் காரணமாக வாலிபர் கணேஷ்குமார் கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசாவில் துபாய் சென்றார். அங்கு நண்பர்களுடன் தங்கியிருந்து வேலை தேடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது, இதில் சிகிச்சை பெற முடியாமல் தவித்த கணேஷ்குமார் சுற்றுலா விசாவில் சென்றதால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றபோது,  புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுற்றுலா விசா மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில் கரோனா தொற்று இருப்பதால் விமானம் கிடைக்காமல் நண்பர்கள் அறையில் தங்கியிருந்து நோயால் அவதியுற்று வந்தார்.இந்த நிலையில் காணொளி மூலம் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் அதில் தனது உயிருக்கு ஆபத்தாக உள்ளது என்றும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இதுபற்றி தகவல் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.ப. ரவிந்திரநாத் குமாருக்கு கிடைத்தது. அவர் இந்திய தூதரகம் மூலம் தொடர்புகொண்டு போடி வாலிபர் கணேஷ் குமாருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்தார். சிகிச்சைகளை பெற்றுக்கொண்ட கணேஷ்குமார் தான் சிகிச்சை பெறும் காணொளி காட்சியை மீண்டும் பதிவிட்டுள்ளார்