ஆடு திருடியதாக புகார் இருதரப்பினர் மோதல் போலீஸ் விசாரணை

பதிவு செய்த நாள் : 17 மே 2020 17:46

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகேயுள்ள முக்கானியில் ஆடு திருடியதாக புகார் செய்ததால் ஏற்பட்ட தகராறால் 10 பேர் கொண்ட கும்பல் மற்றொரு தரப்பினரை கத்தியால் குத்தியதால் ஒருவர் பலி. இரண்டு பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆத்தூர் போலீசார் விசாரணை. போலீஸ் குவிப்பு பதற்றம்..!!

திருச்செந்தூர் அருகேயுள்ள உமரிகாட்டை சேர்ந்த பட்டுராஜ் என்பவரின் ஆட்டை முக்கானி பஜாரில் கறிகடை நடத்தி வரும் மணிகண்டன் மற்றும் புல்லாவெளியை சேர்ந்த அவரது நண்பர்கள் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் உமரிக்காட்டை சேர்ந்த பட்டுராஜ் அவரது உறவினரான முக்கானியை சேர்ந்த கனராஜ் இருவரும் ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் மணிகண்டன்  மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும்  அவரது  நண்பர்கள் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் முக்கானி ரவுண்டானா அருகில் உள்ள பிள்ளையார் நகர் பகுதி சென்று அங்கிருந்த கனகராஜிடன் போலீசில் புகார் கொடுத்ததை தட்டி கேட்டுள்ளனர். இதனால் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றதில்  கனராஜ் தப்பி ஓடிவிடுகிறார். அவர் உடன் இருந்த ராஜதுரை(25), அவரது அண்ணன் சுயம்புதுரை(26), முத்துசெல்வக்குமார்(25) ஆகிய மூன்று பேருக்கு கத்திகுத்து விழுந்தது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியது. இதுகுறித்து தகவல் தெரிந்த ஆத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து  கத்தி குத்தில் காயமடைந்த மூன்று பேரையும் சிகிச்சைகாக  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜதுரை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இதனையடுத்து முக்கானி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் ஆடு திருடிய புகாரை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தார் இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.