ராமநாதபுரத்தில் கொரோனா நிவாரணம் விநியோகம்: ஆட்சியர் ஆய்வு

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 19:27

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 874  குடும்ப  அட்டைகளுக்கு கொரோனா நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்கும் பணி  இன்று முதல் தொடங்கியது .

 நிவாரண தொகை வழங்கலில் முறைகேடு ஏற்படாமலிருக்க கண்காணிப்பு பணியை  மேற்கொள்ள  மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூட்டுறவு, உணவு துறை அலுவலர்களுக்கு  அறிவுறுத்தியுள்ளார்.

 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25 முதல் இம்மாதம் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு  அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும்  வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் கொரோனா வைரஸ் தடுப்பு கால நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைகளுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன் ஏப்ரல் மாதத்திற்கு உரிய 20 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய்  ஆகியவற்றை  இலவசமாக வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.  ராமேஸ்ரம் சுற்று பகுதிகளில் உள்ள  ரேஷன் கடைகள் மூலம்  கொரோனா நிவாரணம் இன்று முதல்  வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கன் விநியோகம்

ராமேஸ்வரத்தில் உள்ள நியாய விலை கடைகளில்  1300 -- 1500 கார்டுதாரர்கள் உள்ளதால் நிவாரணம் விநியோகத்தின் போது கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க நியாய விலைகடை ஊழியர்கள் குடும்ப அட்டை தாரரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆயிரம் ரூபாய் உடன் அரிசி உள்ளிட்ட ரேஷன்  பொருட்களை எந்த தேதியில் கடைக்கு வந்து பெற்று கொள்ளலாம் என்ற டோக்கன்  வழங்கப்பட்டு வருகிறது.

நிவாரண தொகையை  வீட்டுக்குச் சென்று கொடுப்பதால்  கொரோனா தொற்றை தடுக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் உதவி கரமாக இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.