சிவகாசி உட்கோட்டத்தில் டோக்கன்கள் விநியோகம்

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 19:24

சிவகாசி

சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள 123 ரேசன் கடைகளில் நிவாரண பணம் பெற டோக்கன்கள் வழங்கப்பட்டது.

சிவகாசியில் பேரிடர் நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம், மற்றும் விலையில்லா பொருட்கள் வழங்கும் பணி இன்று காலை துவங்கியது.


சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள சிவகாசி, திருத்தங்கல், நாரணாபுரம், அணுப்பன்குளம், விஸ்வநத்தம், சித்துராஜபுரம், பேர்நாயக்கன்பட்டி, வடபட்டி, செங்கமலநாச்சியார்புரம்,பள்ளபட்டி பகுதிகளில் உள்ள 123 ரேசன் கடைகளிலும் நிவாரண பணம் பெறுவதற்கான டோக்கன்கள் இன்று வழங்கப்பட்டது. சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களில் பணம் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. ஊராட்சி பகுதிகள் சிலவற்றில் நிவாரணப் பணம் 1000 ரூபாயும், விலையில்லா அரிசியுடன், 1 கிலோ துவரம் பருப்பு, 1கிலோ சீனியும் வழங்கப்பட்டது. எண்ணெய், மளிகைப் பொருள்கள் கடைகளில் இருப்பு இல்லை என்றும், சரக்குகள் வந்தபின் அனைவருக்கும் வழங்கப்படும் என்று பொது மக்களிடம் ரேசன் கடை ஊழியர்கள் கூறினர்.

முன்னதாக பணம், மற்றும் விலையில்லா பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமாக வரும போது நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரேசன் கடை பகுதிகளில், தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர், மக்கள் நிற்பதற்கான சமூக இடை வெளிக் கோடுகளை அந்தந்த பகுதிகளில் வரைந்தனர்.

இது வரை தற்காலிக காய்கறிக் கடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தற்போது ரேசன் கடை நிவாரணப் பொருள் வழங்கும் போது குழப்பம் எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பணியினையும் சேர்த்து செய்து வருகின்றனர். திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ரேசன் கடைகளை மேற்பார்வையிட்டார்.

நிவாரண பணம் மற்றும் பொருள்கள் வழங்குவதற்காக வருவாய்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், போலீஸ் துறையினர் சேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து வழங்கல் துறை அதிகாரிகள் கூறியது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பணம், மற்றும் விலையில்லா அத்தியாவசியப் பொருள்கள் முழுமையாக வழங்கப்படும். மளிகைப் பொருள்கள், எண்ணெய் கையிருப்பு குறைவாக உள்ளது, விரைவில் அனைவருக்கும் அனைத்துப் பொருள்களும் வழங்கப்படும் என்று கூறினார்கள்.