கரோனை வைரஸ் தடுப்பு பணிகளில் காவல்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறையினரின் உழைப்பை பொதுமக்கள் வீணடிக்க வேண்டாம்

பதிவு செய்த நாள் : 31 மார்ச் 2020 11:51

சென்னை

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் ஒழிப்பதற்காக காவல்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை என பல்வேறு தரப்பில் பணியாற்றுபவர்கள் பொதுமக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் உழைப்பை பொது மக்கள் வீணடித்துவிடவேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை வெளியில் அனுமதிக்காமல் காவல்துறையினர் கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். இந்த நேரத்தில் பொதுமக்கள் வீட்டில் தனித்திருக்காமல் பொது வெளியில் எந்நேரமும் சுற்றித் திரிகிறார்கள்.

பொதுமக்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குள் வரும்போது கரோனா வைரஸ் தொற்று அவர்களது குடும்பத்திற்கும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால், விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு – என்ற இந்த எளிய நடைமுறையை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸை ஒழிக்கும் பணியில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் உழைப்பை நீங்கள் வீணடித்துவிடாதீர்கள் என தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.