அவசரப் பயணம் மேற்கொள்வோருக்காக சென்னை காவல்துறையின் புதிய கட்டுப்பாடு அறை திறப்பு

பதிவு செய்த நாள் : 29 மார்ச் 2020 10:29

சென்னை

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் வெளியூருக்கு அவசரப் பயணம் மேற்கொள்வோர் வசதிக்காக சென்னை காவல்துறையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில்,

தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம், மற்றும் மருத்துவத் தேவை ஆகிய நிகழ்ச்சிகளுக்கு சென்னை மாநகரத்திற்குள்ளோ, தமிழகத்திற்குள்ளோ அல்லது வெளி மாநிலத்திற்கோ பயணம் செய்வோர் இந்தக் கட்டுப்பாட்டு அறையை 75300 01100 என்ற செல்போன் எண் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்.

வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் gcpcorona2020@gmail.com மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்றும்

அவசரத் தேவைக்கு வெளியே செல்ல அனுமதிச்சீட்டு கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் சேவையானது மேற்குறிப்பிட்டுள்ள அவசர தேவைகளுக்காக மட்டுமே தவிர, சாதாரண தேவைகளுக்கு அல்ல என சென்னை பெருநகர காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.