கடல் அலையா தலையா? குமரனவன் கலையா? திருச்செந்தூர் கோவில் வெறிச்!

பதிவு செய்த நாள் : 29 மார்ச் 2020 10:03

பாளையங்கோட்டை

வரலாற்றில் முதல்முறையாக கடந்த சில நாட்களாக திருச்செந்தூர் கடற்கரையோரம் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் யாரும் வருகை தராததால் வெறிச்சோடி  காணப்படுகிறது.


கொரோனா எதிரொலியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மும்மத ஆலயங்கள் இயங்காமல் மூடப்பட்டன. ஆகம விதிமுறைப்படி இயங்கினாலும் பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே சென்று கூட்டம் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. தற்போது 144 ஊரடங்குச் சட்டம் போடப்பட்ட நிலையில் ரயில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. பொது ஜனங்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய அரசு கடுமையாக எச்சரித்தது. மக்களும் அதனை கடைபிடிக்க தெரு வீதிகளில் மனித நடமாட்டம் ஏதுமில்லை மிகவும் பிரசித்தி பெற்ற கடற்கரை ஓரம் அமைந்துள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கும். கந்தர் சஷ்டி மற்றும் தைப்பூச திருவிழா நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே கூடுவர். எப்பொழுது பார்த்தாலும் பக்தர்கள் கூட்டத்திற்கு குறைவிருக்காது. திருச்செந்தூரின் கடலோரத்தில்.. என்ற பாடல் வரிகளை நமக்கு நினைவுக்கு வரும். கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா ? பெரியவர் சிறியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா? என்ற வரிகள் தான் இப்பொழுது நம் நினைவுக்கு வருகிறது.

அந்தப் பாட்டுக்கு ஏற்ற நிலை இப்போது இல்லை.. வானுயர்ந்த கோபுரம்.. ஓயாத அலை வீசும் கடலோரம். பிரகாரத்தை சுற்றி பலவித கதைகள் அனைத்துமே அமைதி காத்து கொண்டு இருக்கிறது. மீண்டும் கடல் அலைகளையும் மனிதர் தலைகளையும் பார்த்து ரசிக்கும் நன்னாளை எதிர்நோக்கி காத்திருப்போம்.