நெல் கொள்முதல் மையங்கள் மூடல் * அறுவடை பாதிப்பு; விவசாயிகள் கவலை

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 17:31

நாகர்கோவில், 

ஊரடங்கு உத்தரவு காரணமாக குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நெல் கொள்முதல்  மையங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் அறுவடை பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உச்ச கட்டமாக அடுத்த மாதம் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாநிலங்கள் எல்லை, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வாகன போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள், சந்தை உட்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நெல் கொள்முதல் மையங்கள் மூடப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி மாவட்ட தலைநகரமான நாகர்கோவிலில் தனியார் அரிசி ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் தற்போது அறுவடை செய்யப்படும் நெல் அரிசி ஆலைககளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர்.

வயல்களில் அறுவடைக்கு தயாரா நாற்றுகளை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அறுவடை செய்யப்பட்டு உள்ள வயல்களில் வைக்கோல்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.