நெல்லை. துாத்துக்குடி திரவ உயிர் உர உற்பத்தி மையங்கள்: முதல்வர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020 23:00

சென்னை,

திருநெல்வேலி துாத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் திட உயிர் உர உற்பத்தி மையங்கள் ரூ 12.80 கோடி மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்கி திரவ உயிர் உர உற்பத்தி மையங்களாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவை அதிகரிக்கும் நோக்கத்தில், 25,000 ஏக்கர் தரிசு நிலங்களை கண்டறிந்து, சாகுபடிக்கு ஏற்றதாக அந்நிலங்களை சீர்திருத்தி, உழவுப் பணி மேற்கொண்டு, வறட்சி தாங்கி வளரும் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் வழங்க, 10.40 கோடி ரூபாய் வழங்கப்படும்.

காவேரி டெல்டா மாவட்டங்களில் 44ம், மற்ற மாவட்டங்களில் 81ம் என மொத்தம் 125 துணை வேளாண் விரிவாக்க மையங்கள், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பாண்டில் கட்டப்படும்.

 நடப்பாண்டில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவாரூர், தேனி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள திட உயிர் உர உற்பத்தி மையங்கள், 12.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்கி,திரவ உயிர் உர உற்பத்தி மையங்களாக மாற்றப்படும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை வழங்க, புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்அமைத்து தரவும், ஏற்கனவே உள்ள 2 விதை சுத்திகரிப்பு நிலையங்களின்தரத்தை உயர்த்தி நவீனப்படுத்தவும், நடப்பாண்டில் 3 கோடியே 91 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

நெல் ரகங்களின் பாதுகாவலர் மறைந்த. நெல் ஜெயராமனின்நினைவைப் போற்றும் வகையில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் """"பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’’ அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டில் காய்கறி மற்றும் பழங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படும் 250 வட்டாரங்களில், நடப்பாண்டில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில்நாற்றங்கால் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். 

தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக நடப்பாண்டில் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி, வருமானத்தை உயர்த்திட, காவேரி டெல்டா மாவட்டங்களில் 7,500 ஏக்கர் பரப்பளவில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படும்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வெற்றிலை பயிருக்கான சிறப்பு மையம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். 

2020-2021ஆம் ஆண்டில் மேலும் 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்.  தூத்துக்குடி மாவட்டம் புதூர் முதன்மைப் பதப்படுத்தும் நிலையத்தில், சிவப்பு மிளகாய் அரவை செய்து சிப்பம் கட்டுதல், திருச்சிமாவட்டம் மண்ணச்சநல்லூர் முதன்மைப் பதப்படுத்தும் நிலையத்தில் வெங்காயம் பதப்படுத்தும் இயந்திரம், போன்ற இரண்டாம் நிலை பதப்படுத்தும் இயந்திரங்கள், 15 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 50ஆவது ஆண்டு நிறைவடைந்த சிறப்பைப் போற்றிடும் வகையில், பழமையானகட்டடங்களை புதுப்பிக்கவும், நினைவு மண்டபம் கட்டவும், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கருத்துக் காட்சிகளும், கருத்தரங்குகளும் நடத்துவதற்காக அரசு 29கோடியே 86 லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கும். 

பல்வேறு நாடுகள் பின்பற்றி வரும் தொழில் நுட்பங்களை நமது விவசாயிகள் காணவும், அவற்றை கடைபிடிக்கவும் ஏதுவாக,வெளிநாடுகளுக்கு அழைத்துத் செல்ல, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். நாகப்பட்டினம்மாவட்டம், வேதாரண்யம் வட்டம், வடுவாஞ்சேரி கிராமத்தில், புதியவேளாண் ஆராய்ச்சி நிலையம் ஒன்று 200 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் உருவாக்கப்படும். இதற்காக நடப்பாண்டில் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் இவ்வாறு முதல்வர் இபிஎஸ் தெரிவித்தார்,