குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் சட்டசபையில் முதல்வர் இபிஎஸ் பதில்

பதிவு செய்த நாள் : 17 மார்ச் 2020 20:45

சென்னை,

குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,

மீன்வளம் பணியாளர் சீர்திருத்தத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில்: வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என வட மாநிலங்கள் வாழ்வது குறித்து அண்ணா  பேசினார். ஆனால் இப்போது வடக்கு வாழவில்லை. தெற்கு தேய்ந்து கொண்டிருக்கிறது,  தற்போது பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்து வருகிறது. ஆனால் இந்த தொழிற்சாலைகள் தென் மாவட்டங்களுக்கு வருவதில்லை, என்றார்,

இதைத்தொடர்ந்து தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்: பேசுகையில்  தூத்துக்குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு  தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலை அமையும் போது 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், மேலும் பல தொழிற்சாலைகள் தென் மாவட்டங்களில் அமைவதற்கான ஓப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. என்று பதிலளித்தார், இதையடுத்து  அனிதா ராதாகிருஷ்ணன்: தொழிற்சாலைகள் அறிவிப்போடு நின்று விடாமல், விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்..

தமிழக மீனவர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். எனது தொகுதியில் பல மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் வீடுகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மீன் வலை கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் ஜெயகுமார் இதுவரை  தென்மாவட்டங்களில் இந்த 4 ஆண்டுகளில் ஒரு முறை கூட வரவில்லை. என்று குற்றம்சாட்டினார்,

அதற்கு அமைச்சர் ஜெயகுமார்: மீனவர் நலன் காக்கும் அரசாக ஜெயலலிதா அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. உங்களுடைய ஆட்சி காலத்தில் மீன்வளத்துறைக்கு 193 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் எங்களுடைய ஆட்சி காலத்தில் தற்போது 1229 கோடி ரூபாயை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். மேலும் உறுப்பினர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று விடையளித்தார்,

இதைத்தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்: குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அனுமதியைநாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெற்று தந்து உள்ளார்,அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டார்,

அதற்கு பதிலளித்த .முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

இஸ்ரோ தலைவர் தமிழகத்தை சேர்ந்தவர். தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்று என்னை சந்தித்து கோரிக்கை வைத்தார். தமிழக அரசு நிலம் ஒதுக்கி தந்தால், பிரதமரிடம் பேசி ஏவுதளம் அமைக்க அனுமதி பெற்று தருவதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் நிலம் ஒதுக்கப்பட்டு ஏவு தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்,