சென்னை,
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட வடக்குவள்ளியூர், திசையன்விளை மற்றும் பணகுடி ஆகிய 8 பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து ரூ.131 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் உள்ளாட்சித்துறை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதிலளித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு
*திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு, நாங்குநேரி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி மற்றும் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட வடக்குவள்ளியூர், திசையன்விளை மற்றும் பணகுடி ஆகிய 8 பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து ரூ.131 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.
*திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி மற்றும் ஆலங்குளம் ஊராட்சி
ஒன்றியத்தைச் சார்ந்த 23 ஊரகக் குடியிருப்புகளுக்கான 20,000 மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.27 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
*ஈரோடு, வேலூர் மற்றும் ஓசூர் மாநகராட்சிகளில் ரூ.127.75 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வடிவமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
*கழிவு நீர் குழாய்கள் மற்றும் ஆள் இறங்கு குழிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவது மற்றும் சுத்தம் செய்வதற்கு பாதாள சாக்கடைத் திட்டம் முடிவுற்று பயன்பாட்டில் உள்ள 34 நகரங்களில், ஒரு நகரத்திற்கு ஒரு ரோபோட் இயந்திரம் வீதம், 34 இயந்திரங்கள், ரூ.35 கோடி செலவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வாங்கப்படும்.
*கோயம்புத்தூர், மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.175 கோடி மதிப்பீட்டில் 152.95 கி.மீ. நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
*மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றி உயிரி அகழ்வு முறையில் நிலங்கள் மீட்டெடுக்கப்படும்.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.