ஆர்.கே. நகர் தொகுதி உள்பட 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்- டி.டி.வி.தினகரன் பேட்டி

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2020 12:59

சென்னை,

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதி உள்பட 2 தொகுகளில் போட்டியிடுவேன் என டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை - ராயப்பேட்டையில் அ.ம.மு.க.வுக்கு புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதை கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கருணாநிதியை எம்.கே. என்போம். அவர் தலைவராக இருந்த கட்சியில் இன்றைக்கு பி. கே. ( பிரசாந்த் கிஷோர்) என்பவர் இருக்கிறார் என்று தமிழ்நாடு  முழுவதும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பேசுகிறார்கள்.

ஆனால் ஒரு சட்டமன்றத் தொகுதியை எடுத்துக் கொண்டால் குறைந்தபட்சம் 5 பிரசாந்த் கிஷோராவது எங்கள் கட்சியில் இருக்கிறார்கள்.

ஆனால் நிச்சயம் தமிழ்நாட்டில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவாக்கும் என்ற ஒரே கொள்கையோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்..

விலை போனவர்களால் எங்கள் இயக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. ஏனென்றால், அம்மாவின் ஆட்சியையும், அம்மாவின் கட்சியையும் மீட்டெடுப்பதற்காக உண்மையான தொண்டர்கள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் சென்னை - ஆர்.கே. நகரில் நிச்சயம் போட்டியிடுவேன். வரும் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று இருக்கிறேன். அதில் ஒரு தொகுதி ஆர்.கே.நகர்.  மற்றொரு தொகுதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

என்னை அரசியலுக்கு கொண்டு வந்ததே தென்மண்டலம்தான். அதனால் அந்த பக்கத்திலும் போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆர்.கே. நகரில் போட்டியிட்டது திடீர் முடிவுதான். தென் பகுதியில் போட்டியிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

 யார் ஆளுமையாக இருக்கிறார், யார் வலுப்பெற்றிருக்கிறார் என்பது தேர்தல் வந்தால் மக்கள் சொல்வார்கள், நான் சொல்லக்கூடாது.

தென் மாவட்டத்தில் நான் போட்டியிட வேண்டும் என்று பல இடங்களில் கோரிக்கை வைக்கிறார்கள் என்பதால்தான் இரு தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்து இருக்கிறேன்.

எனக்கு தோல்வி பயம் எல்லாம் கிடையாது. தென் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் அங்கு ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்.

எங்கள் கூட்டணி மூன்றாவது அணியா? இரண்டாவது அணியா? என்பதை தேர்தல் நேரத்தில் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.

ரஜினிகாந்த் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக நான் என்ன பதில் சொல்ல முடியும்?

2021 பிப்ரவரி தான் சசிகலா வெளிவர முடியும். இருந்த போதிலும் முன்னரே வெளியே கொண்டு வருவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். உங்களின் கேள்விகளுக்கு எல்லாம் சசிகலா பதில் சொல்வார்.

இவ்வாறு டிடிவி. தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.