தேனி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவராக ஓ. ராஜா போட்டியின்றி தேர்வு

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2020 15:44

தேனி,

தேனி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவராக ஓ. ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை ஆவின், 50 ஆண்டுகால வரலாறு கொண்டது. தேனி, மதுரை ஆகிய 2  மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை ஆவின், கடந்த ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மதுரை, தேனி எனத் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தது. இதனால், தேனி ஆவினில், 17 இயக்குநர்கள், 474 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 33,000 பேரிடம் தேனி ஆவின் நிர்வாகம், பால் கொள்முதல் செய்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜா, தேனி ஆவின் தலைவராக அறிவிக்கப்பட்டு, 17 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

தேனி என்.ஆர்.டி. நகரில் 50,000 ரூபாய் மதிப்பில் வாடகை கட்டிடத்தில், தேனி ஆவின் அலுவலகம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி தொகுதி மக்களவை எம்.பி.யுமான ரவீந்திரநாத்குமார் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, பொதுக்குழுவைக் கூட்டி, தலைவர், துணைத் தலைவர் மற்றும் இயக்குநர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், ஓ.ராஜா, முறைகேடாக தன்னை தேனி ஆவின் தலைவராக அறிவித்துக்கொண்டார்  எனக் கூறி, தேனி பழனிச்செட்டிபட்டியைச் சேர்ந்த அம்மாவாசி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

ஓ. ராஜா தலைவராகத் தேர்வு

தேனி ஆவினுக்கு 17 இயக்குனர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வானதை முன்னிட்டு, தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் இன்று காலை நடைபெற்றது.

தலைவராக ஓ.ராஜா, துணைத்தலைவராக செல்லமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் பதவியேற்றனர்.