மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசனுடன் அமைச்சர் செல்லூர் ராஜு சந்திப்பு

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2020 17:46

மதுரை,

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை, தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று சந்தித்து பேசினார்.

மதுரை ரயில் நிலையம் அருகிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தான் எழுதிய புகழ்பெற்ற வரலாற்று புதினமான வேள்பாரி புத்தகத்தை சு.வெங்கடேசன் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு பரிசாக வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, 

மத்திய அரசிடமிருந்து மதுரை மாநகருக்கு தேவையான நிதியை பெறுவது குறித்து பேசவே நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க வந்ததாக தெரிவித்தார்.

கட்சி, கொள்கை வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், மக்கள் பணிக்காக இணைந்து செயல்படுவதில் தவறில்லை.

எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்று நாங்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை. கீழடி அகழ்வாய்வுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர் சு. வெங்கடேசன். அதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி, தற்போது 6-ம் கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன. ஆரம்ப காலத்திலிருந்து பொதுவுடமைத் தோழர்களுடன் துணை நின்றவர்கள் நாங்கள். என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.