தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாலைமறியல் தொடர்கிறது

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2020 19:20

சென்னை

வெள்ளியன்று இரவு வண்ணாரப்பேட்டையில் பிடித்த போராட்டத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டங்கள் ஏற்பட்டன.

இப்போராட்டங்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சனிக்கிழமை அன்றும் தொடர்ந்து நடந்தன,

தென்காசி, திருநெல்வேலி,  தூத்துக்குடி மாவட்டத்தில் பல நகரங்களிலும் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் தொடர்ந்து நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன

திருநெல்வேலி தென்காசி சாலையில் அரசு மருத்துவமனை அருகே சாலையில் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடிக் கோஷமிட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி டிஎஸ்பி ,ஆய்வாளர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு தென்காசிக்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது,

பழைய குற்றாலம் சாலை வழியாக போலீசார் போக்குவரத்தை திருப்பி விட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் உடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு விட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

மதுரையில் கே புதூர், கோரிப்பாளையம், நெல்பேட்டை, வில்லாபுரம் ,ஊத்தங்குடி, ஜின்னா திடல், எஸ் எஸ் காலனி ஆகிய பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன.

தூத்துக்குடியில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் தெற்கு காவல் நிலைய எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

ராமநாதபுரத்தில் பள்ளிவாசல் எதிரில் ஏராளமானவர்கள் கூடி சாலையில் அமர்ந்தனர். சென்னையில் நடந்த தடியடி குறித்து நீதிவிசாரணை வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர் .

ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

திருச்சி பாலக்கரை பகுதியில் பல முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சனிக்கிழமை காலை துவங்கிய இந்த ஆர்ப்பாட்டம் சில மணி நேரங்கள் நடந்தது .சாலை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் ஆர்ப்பாட்டம் நடக்கும் படி போலீசார் அவர்களிடம் அறிவுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சப் ஜெயில் சாலையில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர் .குடியுரிமை திருத்த சட்டம் அடக்குமுறைச் சட்டம் என்று அவர்கள் கோஷமிட்டனர். நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததை கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டனர்.

 திருச்சியில் பல பகுதிகளிலும் வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியைக் கண்டித்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.