தூத்துக்குடியில் ரூ.49,௦௦௦ கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 19:02

சென்னை

தூத்துக்குடியில் குவைத் நாட்டின் அல் கெப்லா அல் வட்யா ரூ.49,௦௦௦ கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருள்கள் தயாரிப்பு ஆலை நடப்பு ஆண்டில் அமைக்க உள்ளது என 2020ம் நிதியாண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் 21,966 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மாநில அரசின் ஆதரவு வழங்கும் ஒப்பந்தத்திற்கும், பங்குதாரர்களின் ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

புதுமை முயற்சிகளை தொடக்க நிலையிலேயே ஊக்குவிக்க, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் (TANII) கீழான நிதியுதவியுடன், 53.44 கோடி ரூபாய் செலவில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் தொழில் புதுமை முயற்சி மையங்களை நிறுவும் பணிகளை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும்.

34.81 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் வர்த்தக எளிதாக்குதல் மையம் ஒன்று சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையை, 634 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (SIPCOT) நிறுவும்.  தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் (TIDCO), ஹெச்.எல்.எல் லைஃப் கேர் நிறுவனமும் (HLL Life care Ltd) இணைந்து 205 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டிற்கு அருகில் ஒரு மருத்துவப் பூங்காவை நிறுவிட உத்தேசித்துள்ளன. மொத்தம் 10 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய சிமெண்ட் ஆலையை அரியலூரில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் (TANCEM) தொடங்கி, தற்போதைய உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளது.

2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் தொழில் துறைக்கான ஊக்கத் தொகை வழங்குவதற்காக 2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயன்களை விரிவுபடுத்தும் வகையில், தற்போதுள்ள திட்ட முதலீட்டிற்கான வரம்பு 10 இலட்சம் ரூபாயிலிருந்து

15 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதுடன், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தகுதி வாய்ந்த மானியத்தின் வரம்பும் 1.25 இலட்சம் ரூபாயிலிருந்து 2.5 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இதனால், ஆயிரக்கணக்கான வளர்ந்து வரும் தொழில்முனைவோர் ஊக்கம் பெறுவார்கள். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 33 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் அதிகபட்ச மூலதன மானியத்தை 30 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக அரசு உயர்த்தி வழங்கும்.

2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் மற்றும் கடன் உத்தரவாத நிதிக்குழுமத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி மானியம் தொடர்ந்து 3 சதவீதமாகவே இருந்து வருகிறது. இந்த இரண்டு திட்டங்களுக்கான வட்டி மானியங்களும் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

33.70 கோடி ரூபாய் செலவில், பிடாநெரி, பெரிய நெசலூர், ஊத்தங்கரை மற்றும் மரிக்குண்டு ஆகிய இடங்களில் நான்கு புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குருக்கல்பட்டி மற்றும் பெருந்துறையில் இரண்டு புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் உமையாள்புரம், புத்திரகவுண்டன்பாளையம் கிராமங்களில் 4.50 கோடி ரூபாய் செலவில் புதிய தொழிற்பேட்டை நிறுவப்படும்.

2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கத் திட்ட செயல்பாடுகளுக்காக 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்காக 607.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவில், நிதி தொழில்நுட்ப  சிறப்பு மையம் ஒன்றினை ஏற்படுத்த மாநில அரசு 5.75 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது.  அதிகரித்து வரும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, தேவையான இட வசதியை வழங்கும் விதமாக, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் 100 கோடி ரூபாய் செலவில் 2.50 இலட்சம் சதுர அடி  கூடுதல் அலுவலக பரப்பு மற்றும் திருச்சியில் 40 கோடி ரூபாய் செலவில் 1 இலட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பு நிறுவப்படும்.

சத்துணவுத் திட்டம் தொடரும்

43,243 மதிய உணவு மையங்களில் செயல்படுத்தப்படும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ், நாள்தோறும் 48.57 இலட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 1,863.32 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து குறைபாடு அற்ற மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்வதற்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், குழந்தைகளின் ஆரம்ப கால கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,535.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, 2020ம் நிதியாண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.