கடலூர் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையால் விவசாயத்துக்கு பாதிப்பில்லை: அமைச்சா் எம்.சி. சம்பத்

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2020 19:45

சென்னை

கடலூரில் அமையவுள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படாது என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சா் எம்.சி. சம்பத் உறுதியாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், அரசின் இ-வலைதள சந்தையில் (ஜெம்-GeM) அதிக அளவில் ஈடுபட்டு பயனடைய வலியுறுத்தி, ‘ஜெம் சம்வாத்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை கலைவாணா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழில்துறை அமைச்சா் எம்.சி. சம்பத் பேசியதாவது:

இந்திய அளவில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 865 விற்பனையாளா்கள் மற்றும் சேவை த் தொழில் நிறுவனங்கள் ஜெம் போர்ட்டலில் இணைந்துள்ளன. இந்த இணைய தள மேடை மூலம் 18 லட்சத்து 63 ஆயிரத்து 545 பொருள்களை அரசுத் துறைகள் கொள்முதல் செய்யலாம்.

இதுவரை இந்திய அளவில் 45, 800 கோடி ரூபாய் அளவுக்கு ‘ஜெம் போர்ட்டல்’ மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

‘ஜெம் போர்ட்டல்’ மூலம் தமிழ்நாடு அரசால் 892.19 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சோ்ந்த 2, 985 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஜெம் போர்ட்டலில் பதிவு செய்து தங்கள் உற்பத்தி பொருள்களை, ரூ.311.38 கோடி அளவுக்கு விற்பனை செய்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 22 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. மேலும் பல சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், அரசின் இ-வலைதள சந்தையில் ஈடுபட்டு அதிக அளவில் பயனடைய வேண்டும் என்றார் தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத்.

தொடா்ந்து சிறப்புரை ஆற்றிய ஊரக தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின்,

அரசு இ-வலைதள சந்தையில் தமிழக அரசுத் துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் அதிக அளவில் இச்சந்தையின் மூலம் பயனடைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சா் எம்.சி. சம்பத் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

தொழில் துறை சார்பாக போடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடலூருக்கு பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை வருவதால் விவசாயத்துக்கு எந்த பாதிப்பு இருக்காது.

பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையால் சுமார் 1000 பேருக்கு நேரடியாகவும், 20,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.