குரூப் 4 தேர்வு முறைகேடுகள்: உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கோரி மனு

பதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2020 19:16

மதுரை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய பல் தேர்வுகளில் முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. குரூப்- 4,  குரூப்- 1 குரூப்- 2 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மதுரை கே.கே. ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் மனு விவரம்:

"தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கு கடந்த பல ஆண்டுகளாக கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுப்பதில்லை. இந்த தேர்வை கண்காணிக்க மண்டல அளவில்  டிஎன்பிஎஸ்சி அலுவலகமும் இல்லை. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு  வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் மற்றும் ஆசிரியர்களையே டிஎன்பிஎஸ்சி முழுமையாக நம்பியுள்ளது.

இதனால் தேர்வுகளில் முறைகேடு செய்து லாபமடைய  விரும்புகிறவர்களுக்கு சாதகமாக அமைகிறது.

சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வி்ல் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை குரூப் 1 மற்றும் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக உறுதி செய்வதாக போலீசார் கூறுகின்றனர். 

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும்" என கோரி உள்ளார்.