சி.ஐ.எஸ்.எப். தேர்விலும் முறைகேடு: பாதுகாப்புப்படை வீரர் பிரிகு பாருயா பணியிடை நீக்கம்

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2020 19:36

மதுரை

சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை ஊழியர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர் பிரிகு பாருயா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதும், ஆயுதப்படை காவலர்கள், அரசு அதிகாரிகள் உள்பட 39க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதும் தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிஐஎஸ்எஃப் தேர்விலும் முறைகேடு

சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்புப் படை வீரர் பிரிகு பாருயா. அஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர், கடந்த 2017ம் ஆண்டு சி.ஐ.எஸ்.எப் தேர்வில் தேர்ச்சி பெற்று மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

பின்னர் பயிற்சியின்போது நடைபெற்ற அடுத்தடுத்த தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயிற்சி குழுவினர் சந்தேகமடைந்து பயிற்சியின்போது எழுதப்பட்ட தேர்வின் கையெழுத்தையும் முதலில் பணியில் சேருவதற்காக எழுதப்பட்ட தேர்வின் கையெழுத்தையும் சரிபார்ப்பதற்காக சிம்லாவில் உள்ள இந்திய அரசு கையெழுத்து சரிபார்க்கும் மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இரண்டிலும் எழுத்து வித்தியாசம் இருந்ததால் பிரிகு பாருயாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிரிகு பாருயா எழுத்துத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்வு முறைகேட்டில் வேறு யாரும் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.