சாலை விரிவாக்காத்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல்

பதிவு செய்த நாள் : 03 பிப்ரவரி 2020 14:43

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சாலை விரிவாக்காத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி குரும்பூர் பகுதி வணிகர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் திருச்செந்தூர் - திருநெல்வேலி மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் குரும்பூர் ஆகும். இப்பகுதி வணிகர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் தாமஸ் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரியிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், 

எங்கள் ஊரில் சிறு சிறு வியாபாரிகள் சாலையின் இரு பக்கங்களிலும் வணிக நிறுவனங்கள் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து கடைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அறிவித்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊரில் கடைகளே இல்லாமல் போகும் அளவுக்கு சாலை விரிவாக்கம் இருக்கிறது.

எங்கள் குக்கிராமத்தில் நாங்கள் வியாபாரிகள் அனைவரும் கடைகளில் வியாபாரத்தை நம்பியே எங்களது வாழ்வாதாரம் அமைந்துள்ளது. ஆனால் எங்களுடைய வாழ்வாதாரம் அனைத்தும் இந்த சாலை விரிவாக்கத்தால் பாதிப்படைந்த விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் எங்கள் ஊரில் சாலை விரிவாக்கத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி குரும்பூர் பகுதி வணிகர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இடம் மனு அளித்தாக தெரிவித்தனர்