மதுரையில் பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 15:32

மதுரை,

மதுரையில் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என வந்த மிரட்டலை அடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசிக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார்.

மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவித்துவிட்டு தொடர்பைத்  துண்டித்துள்ளார்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில், மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர் குழு மூலம் சோதனை நடத்தினர்.

மதுரை நகரில் உள்ள  பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள், ரயில் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள் என முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். 

மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படும் வரும் நிலையில், மர்ம நபரின் வெடிகுண்டு மிரட்டல் பேச்சு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு புரளி

மதுரை பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்- புரளி என்பது போலீஸாரின் பலவித சோதனைகளுக்குப்பின் தெரியவந்தது.