காவல்துறை எஸ்.ஐ. வில்சன் கொலை - உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி,

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2020 15:14

சென்னை,

காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பட்ந்தாலுமூடு சோதனை சாவடியில் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் நேற்று பணியில் இருந்தார்.
தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியில் சாலைப்போக்குவரத்து சோதனைச்சாவடியில் நின்று வாகனங்களை சோதித்த சிறப்பு துணை காவல் ஆய்வாளர் வில்சன், திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒரு காரை சோதனை செய்ய தடுத்து நிறுத்தினார். காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை நோக்கி துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளனர்.

உதவி ஆய்வாளர் வில்சன் தலை, மார்பு மற்றும் கால் பகுதியில் குண்டு பாய்ந்து மயங்கி விழுந்தார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு பிற காவலர்கள் வருவதற்குள் காரில் வந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. காயம் அடைந்த ஆய்வாளர் வில்சன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிழந்தார். இச்சம்பம் தமிழ்நாட்டில் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.    

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

இவ்வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும்  தென்மண்டல ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

டிஜிபி திரிபாதி நேரில் விசாரணை

எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக களியக்காவிளைக்கு  தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.