தொழிற்சங்க வேலைநிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2020 12:59

கன்னியாகுமரி:

தொழிற்சங்க வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. கேரளா செல்லும் பேருந்துகள் தமிழ்நாடு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெறுகின்றன.

கேரளாவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுவதால் அங்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

தமிழ்நாட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கேரள எல்லைப் பகுதியில் வேலைக்கு செல்வோரும், மாணவர்களும் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.