தொழிற்சங்க வேலைநிறுத்தத்தால் தூத்துக்குடியில் சரக்குகள் தேக்கம்

பதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2020 12:48

தூத்துக்குடி

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெறுகின்றன.

தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது. வேலைநிறுத்தத்தில் கிட்டத்தட்ட 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுப்பட்டு உள்ளதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியிலும் எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் கூறும்போது, மத்திய அரசு பெருந்துறைமுகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

எனவே இதனை மத்திய அரசு கைவிடும் வகையில் மேஜர் போர்ட் அத்தாரிட்டி பில் 2019-ஐ கைவிட வேண்டும். பென்சன் வழங்கும் நிதியை தனியார் வங்கிகளிலும், பங்குச்சந்தையிலும் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். எனவே மத்திய அரசு தொழிலாளர்கள் விரோத போக்கை கைவிட வேண்டும் என்று கூறினர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக தொழிலாளர் பதிவு கூடம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் லாரிகள் ஓடின. 

இன்று அதிகாலை தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். ஆனாலும் வழக்கம்போல் பஸ் மற்றும் லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடின. இன்று நடைபெற்ற வேலை நிறுத்தம் காரணமாக பாரத் பெட்ரோலியம் நிறுவன லாரிகள் சுமார் 60-க்கும் மேற்பட்டவை ஓடவில்லை.