புத்தாண்டு விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

பதிவு செய்த நாள் : 01 ஜனவரி 2020 14:41

நெல்லை

2020ம் ஆண்டின்  புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பிரார்த்னைகள் நடைபெற்றன.

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் தாமிர சபை முன்பு திருவெம்பாவை பாடி வழிபாடு நடைபெறும். 

மார்கழி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே நெல்லையப்பர் கோயில் திறக்கப்பட்டு, சன்னதி முன் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

பத்தாம் நாள் அதிகாலையில் தாமிர சபையில் நடராஜர் திருநடனக் காட்சியும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், காவடி எடுத்து வந்தும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் கோயிலில் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால், பெருமளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருத்தணி

திருத்தணி முருகன் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் விடிய விடிய மலைக்கோவில் மாட வீதிகளில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

கும்பகோணம்

தமிழக திருப்பதி என்றழைக்கப்படும், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் புத்தாண்டையொட்டி மூலவர் ஒப்பிலியப்ப சுவாமி ராஜஅலங்காரத்திலும், உற்சவர் என்னப்பர், ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

பிரசித்திபெற்ற தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு விஷேக அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை – ஜோதிர் லிங்கம்

12 ஜோதிர் லிங்கங்களையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் விதமாக, பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில் சென்னை குரோம்பேட்டையில் ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்தனர்.

வடபழனி

புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழநி முருகன் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரம்

ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு, ராமேஸ்வரம் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர், தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் வந்திருந்தவர்கள் கடலில் புனித நீராடி புத்தாண்டை கொண்டாடினர்.